Print this page

"ஆனாலும் ஒருசமயம்" ( ஒரு ஜோசியன் ) குடி அரசு - கட்டுரை - 14.06.1931

Rate this item
(0 votes)

* மகாத்மா” காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்கு போகமாட்டார். ஒரு சமயம் போனாலும் போகக் கூடும். ஆனாலும் அது சந்தேகந்தான். அப்படி சந்தேகமில்லாமல் போவது ஒரு சமயம் உறுதியானாலும் அவர்தான் போவாரேயொழிய மற்றவர்கள் போகமாட்டார்கள். ஒரு சமயம் மற்றவர்கள் போனாலும் மகாத்மாதான் காங்கிரஸ் பிரதிநிதியாய் இருப்பார். “மகாத்மா" காங்கிரஸ் பிரதிநிதியாய் போனாலும் வட்ட மேஜை மகாநாட்டில் மாத்திரம் கலந்துகொள்ளமாட்டார். வட்ட மேஜை மகாநாட்டில் ஒரு சமயம் கலந்து கொண்டாலும் காங்கிரஸ் கக்ஷியை மாத்திரம் எடுத்துச்சொல்லிவிட்டு விவகாரத்தில் கலந்துகொள்ளமாட்டார். விவகாரத்தில் ஒரு சமயம் கலந்து கொன் டாலும், பாதுகாப்பு விஷயத்தில் மாத்திரம் சிறிதும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒரு சமயம் பாதுகாப்பில் விட்டுக்கொடுத்தாலும் இந்திய நன்மைக்கென்று தான் எதையும் விட்டுக்கொடுப்பாரேயொழிய பிரிட்டிஷ் நன்மைக்காக வென்று சிறிதும் விட்டுக்கொடுக்க மாட்டார். பிரிட்டிஷ் நன்மைக்காகவென்று ஒரு சமயம் எதாவது விட்டுக்கொடுத்தாலும் " ஐயோ பாவம் அவர்களும் பிரிட்டிஷார்களும் நம்மைப்போல் மனிதர்கள் தானே பிழைத்துப் போகட்டும்' என்று கருதி தயாளத்தின் மீதுதான் விட்டுக்கொடுப்பாரேயொழிய “மிருக பலத்திற்கு "பயந்துகொண்டு ஒருக்காலும் விட்டுக்கொடுக்கமாட்டார். ஒரு சமயம் “மகாத்மா” மிருகபலத்திற்கு பயப்படுவதானாலும் ராஜியை உத்தேசித்தும், பெருந்தன்மையை உத்தேசித்துந்தான் பயப்படுவாரேயொழிய அஹிம்சையும், சத்தியாக்கிரகமும் தோற்றுப்போகுமே என்று ஒரு நாளும் சந்தேகப்பட மாட்டார். ஒரு சமயம் தோற்றுப்போகுமே என்று சந்தேகப்படாமலும் ஒரு சமயம் தோற்றே போய்விட்டாலும் அது கீதையின் ரகசியமாயும், கடவுள் செயலாயுந்தான் இருக்குமேயொழிய ஒரு நாளும் “மகாத்மா காந்தி செயலாய் இருக்க முடியாது என்பது மாத்திரம் உறுதி. 

( ஒரு ஜோசியன் ) குடி அரசு - கட்டுரை - 14.06.1931

Read 41 times